Wednesday, 23 July 2014

பெண்... குழந்தை... குடும்பம்...

சிறு மங்கை
காலில் கொலுசொலி கிணுகிணுக்க 
கைகளில் வளையல்கள் கலகலக்க 
தலையில் மல்லிகை மணமணக்க 
வந்தாள் அந்த சிறு மங்கை... காதலியா 
அல்ல அல்ல என் மகள்

குரல் அல்ல அது குழலும் அல்ல
யாழ் அல்ல அது மீட்டும் வீணையும் அல்ல 
தேன்அல்ல அது தீங்கரும்பு சாருமல்ல 
என் செல்லத்தின் மழலை மிழற்றல் அது


தெய்வம்
உண்டு என்றால் உண்டு... தெய்வம் 
இல்லை என்றால் இல்லை 
கண்மூடி நீ சிந்தி... தெய்வம் 
உன்னில் நீ காணலாம்


பெண் - அமுதசுரபி
கணவனுக்கு காதல்
சின்ன கண்ணனுக்கு பாசம்
மாமன் மாமிக்கு பண்பு
பெற்ற அன்னை தந்தைக்கு நன்மதிப்பு
உடன் பிறப்புக்கு அன்பு
பெண்ணே நீ கொடுப்பதில் அமுத சுரபி 
ஆனால் உனக்கு கிடைப்பதோ...

சிரிப்பு
குழந்தையின் சிரிப்பு மனதை மயக்கும்
தாயின் சிரிப்பு அரவணைக்கும்
தந்தையின் சிரிப்பு உற்சாகமூட்டும்
நண்பனின் சிரிப்பு கவலைகளை நீக்கும் 
ஆனால் என்னவளின் சிரிப்போ என்னையே ஆளும்

பரவசம்
வழங்கியபொழுது பரவசமானான்... அவள்
தங்கள் மழலை செல்வத்தை வழங்கிய பொழுது
கண்கலங்கி மெய் சிலிர்த்து நின்றான்... அவள்
தாம் பெற்ற மகளை முதன் முதலில் கைகளில் ஏந்திய பொழுது
காதலாகி அவன் தன்னவளிடத்தில் படித்த கவிதையை ... அவள்
கருவாக தன்னில் சுமந்து பரிசாக அவனிடமெ வழங்கிய பொழுது
பரவசமானான்...


அன்னைமனம் குளிர
ஆடி வரும் தென்றலே...
உன் பட்டு கன்னத்தில் முத்தமிட
ஆவல்கொண்டேன்
உன்னை கையிரண்டில் அள்ளி அணைத்திட
உள்ளம் தவித்தேன்
உன் மழலைசொல் கேட்டு
மதிமயங்கி கிருகிருத்தேன்
இந்த கண்ணாமூச்சி ஏனடா...
உன் அன்னையை ஏங்க வைக்காதேடா...

உன் ஒவ்வொரு அசைவும் கவிதையடி
உன் ஒவ்வொரு மழலையும் யாழிசையடி
உன் ஒவ்வொருஸ்பரிசமும் தென்றல் தீண்டலடி
உன் ஒவ்வொரு சிரிப்பும் கடவுளின் தரிசனமடி
நான் பெற்ற செல்வமே ஆடி வரும் தேனே
நீயும் எனது தாயடி

மீண்டும் எழுவேன்
எழுந்தேன்  விழுந்தேன்... மீண்டும் எழவே....
நித்தமும் இந்த போராட்டம்... 
வாழ்க்கை ஒரு சுமையா அல்லது சுவையா
நாளும் பொழுதும் பொறுப்புகள் சுமந்து
இரவும் பகலும் அல்லல் பட்டு
விடிவும் காணாது விடையும் கிடைக்காது
திணருகிரேனே... மூச்சு முட்டுகிறதே
இன்றோடு முடிந்தது என எண்ணினேன்
அல்ல அல்ல நாளையும் உண்டு என்றான் படைத்தவன்
அதுவே விதியானால்... அதை மதியால் வெல்வேன்
பீனிக்ஸ் பறவை போல நாளும்
சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவேன்
மீண்டும் விழுந்தேனா... அல்ல எழுந்தேன்...

சில்லு சில்லாக உடைகிறேன்
கண்ணாடி துண்டுகளாக சிதறுகிறேன்
அலையின் மேல் புழுவாக தத்தளிக்கிறேன்
அனல் மேல் மெழுகாக உருகுகிறேன்
நாளும் பொழுதும் தவிக்கிறேன்
வாழ்வில் துன்பம் வரும் என்பர்... அந்த
துன்பமே வாழ்க்கையானால்... தவிப்பு
துடிப்பு அடங்குமா... வாழ்வு மலருமா
நாளும் பொழுதும் நரகமே விடியலாக
காலையும் மாலையும் போராட்டமே வாழ்க்கையாக
துன்பத்தையே சுமந்து இதயம் வெடிக்கிறது
கண்ணீரையே சுமந்து கண்கள் தவிக்கின்றது
கல்லாக பாரம் மனதில் சுமையாக அழுத்துகிறது
வருமோ விடியல் விலகுமோ கரு மேகம்


என்உயிரே
என் மணி வயிற்றில் பிறந்த மகளே
என் உதிரம் வார்த்து செய்த சந்தனசிலையே
என் கருவில் உதித்த மலரே
என் தாயாக என்னை போற்ற வந்தவளே
என் சேயாககையில் தூங்கும் நிலவே
உன் தளிர் வாய் முத்தம் போதுமடி தங்கமே
வானமும் வசப்படும்


மறவாதே கண்ணே
என் கண்ணின் மணியே
உன் செம்பவள வாய் அமுதூட்டியவளை
உன் மழலை ராகத்தை ரசித்தவளை
உன் முதலடி வைத்த பாதத்தை முத்தமிட்டவளை
நீ ஆடி திரிந்துபாடி மகிழ்ந்ததை சுகித்தவளை
அழகிய மொட்டு மலரானதை கண்டு பிரமித்தவளை
இதோ இன்று தன் இதயத்தின் ஒரு பாகமான உன்னை
மற்றொருவனுக்கு தாரை வார்த்துகொடுத்தவளை
உன் ஆருயிர் அன்னையை மறவாதே கண்ணே


பொக்கிஷம்
பொக்கிஷமாக பாதுகாத்தேன்
தோழிகளுடன் கூட்டாஞ்சோறு ஆக்கியதையும்
அன்னை தந்தை உடன்பிறப்புடன்
நிலாச்சோறு உண்டதையும்
கல்லூரி நாட்களில்பகிர்ந்துண்டதையும்
மீண்டும் வருமோ அப்பொற்காலம்
மீளுமோ அவ்வின்பம்


தாலாட்டு
பச்சைகிளியோ என பேசும்
பொற்சித்திரமே
தளிர் நடையிடும்
நந்தவனமே
பூங்காற்றாய் பாடிச் செல்லும்
பூங்குயிலே
என்சின்னவளே
என் செல்வமகளே
ஆறீராரோ நான் பாடிடவெ
நீயும் கண்ணுறங்கு மகளே


பெண் எனும் சக்தி
பறந்துவிரிந்து இருக்கிறேன்
பலதும் பேசி அலசி இருக்கிறேன்
சிரித்து சலித்துகோபித்து
மகிழ்வித்து இருக்கிறேன்
ஆடி பாடி வரைந்து சமைத்து
எழுதிஇசைத்து பேசி சோபித்து இருக்கிறேன்
அமைதியாக காணப்படும் நான்
ஆழ்கடல்முத்துக்கள் நிறைந்தவள்
அள்ள அள்ள குறையாத செல்வங்களை கொண்டவள்
நான் பெண்மை எனும் மகா சக்தி

தினம்பூத்திடுவோம் புது மலராய்
மலர்ந்து மணம் பரப்புவோம் பார் எங்கும்
பலவண்ணங்களாக உறவுகள் கொண்டு
பல வாசம் போல குணம் படைத்து
வாழ்க்கை எனும்தோட்டத்தில்
என்றென்றும் மலர்ந்து சிரித்திடுவோம்

நட்பை மறவேன்
தோளோடு தோள் சேர நடந்ததை
ஒரே தட்டில் தின்ற சோற்றை
மற்றவரைபார்த்து எழுதிய தேர்வுகளை
நீ போட்டுவிட்ட சட்டை பித்தானை
நான் கடித்துகொடுத்த மிட்டாயை
நீ எனக்காக வாங்கிய அடிகளை
நான் உனக்காக இட்ட மண்டிகளை

பொம்மையை கட்டிப் பிடித்து உறங்குது
தாயில்லா சின்னக்குழந்தை
வைக்கோல் கன்றை தீண்டி சுகம் காணுது
கன்றை இழந்த பசு

நீயே தெய்வமாக இருக்கிறாய்
எனக்கு அமுதூட்டிய என் அன்னையே
என்னை மனதனாக்கியஎன் தேவதையே
என்னை சீராட்டி பாராட்டி வளர்த்த என் அன்பு பெட்டகமே
என்றேன்றும்என் மனதில் நீயே
நீங்கா இடம் பெற்றிருப்பாய் என் தாயே

உன் குறும்பால் என் மனதை கொள்ளை கொண்டாய்
உன் மழலையால் எங்களை இன்புறச்செய்தாய்
உன் களிப்பால் எங்கள் கலிதீர்த்தாய்
கண் முன்னே ஆடி வரும் கண்ணா
கண்ணின் மணிவண்ணா

அவளே..
என் செல்ல பொக்கிஷமும் அவளே
சில நேரம் என் அன்னையும் அவளே
சீண்டிசிரிக்கவைக்கும் தோழியும் அவளே
கண்டித்து திட்ட வைக்கும் குறும்பு சகோதரியும்அவளே
பொங்கி சிரிக்கும் கடல் அலை போல சிரிக்கும் சித்திரமும் அவளே
என் அன்புதங்கையே சின்னவளே

அகிலத்தை அன்பால் அணைத்தவள் பெண்
உலகத்தை தன் தனி சிறப்பால் ஆட்சி செய்பவள் பெண்
உலகம்என்னும் குழந்தையை அன்னையாய்
பெற்றெடுத்து வளர்த்தியவள் பெண்
இவ்வையகத்தில் அவளில்லாமல் அணுவும் அசையாது

பெண் மஹா சக்தி...
அன்னையாய் சகோதரியாய் தோழியாய்
மந்திரியாய் நல்லாசிரியராய்மனைவியாய்
அவள் எடுக்கும் அவதாரங்கள் பலப் பல
பிள்ளையை ஏந்தி பாலூட்டிசீராட்டி வளர்ப்பது மட்டுமல்ல
எழுதுகோலையும் கணினியையும் கைப்பற்றி
சாதனைபடைக்கவும் அவளுக்குத் தெரியும்
வாள் ஏந்த தயங்கியதில்லை
வாய் சொற்கள்பயன்படாத போது.
அஞ்சா நெஞ்சுடன் போர் கொள்ள
தடுமாறியதில்லைதேவைப்படும்போது
சில நிர்பயாக்களால் பயந்தவள் அல்ல அவள்
பல ஆயிரக் கணக்கானபெண்களை காக்க
கவசம் பூண்டவள்
பூண்டோடு அழிக்க சக்தி கொண்டு
வீறுநடைபோடுபவள்
அன்பால் அவளை வீழ்த்த முடியும்
மனதால் பூஞ்சையானவள் தான்
ஆனால்வஞ்சகத்தை தாங்கி
மெளனமாக இருப்பவள் அல்ல
அன்பால் பண்பாக துணை நில்மானிடனே
முன்னேறி உன்னையும் முன்னேற்றுவாள்
அடிமை படுத்த நினைக்காதே மாய்ந்துபோவாய்


பயணம் செய் பெண்ணே
அஞ்சாமல் பயணம் செய்
இனி பெண் வாழ்வு மலரும்
எனநம்பிக்கையுடன் செல்
இனி நீ தனி அல்ல
நீயே ஒரு மகா சைனியம் என
திண்மையான எண்ணத்துடன் முன்னேறு

கண்ணேமணியே மரகதமே கற்கண்டே
என சீராட்டி வளர்த்தேனே
அன்னையாக போற்றி பாடிடவேண்டாம்
மாதுவாக மதிக்க கூட மறந்தாயோ மகனே
உன் வீட்டில் ஒரு இடம் இல்லை எனினும்
உன் மனதிலாவது ஒரு துளி இடம் கொடுப்பாயா மகனே
தாய் பாலிற்கு கணக்குபோடவில்லை
ஒரு அன்பு சொல்லிற்கு ஏங்குகிறேன்

பொல்லாத உலகம் இது
தங்கத்தையும் உரசி பார்க்கச் சொல்லும்
சீதையையும் தீகுளித்து வரச் செய்யும்
வாழ்ந்தாலும் பேசும்
தாழ்ந்தாலும் இகழும்
சிரித்தாலும் அழ வைக்கும்
அழுதாலும் சிரித்து கேலி பேசும்
அந்த ஆண்டவனையே விலைபேசும்

என் தோள்களில் உறவாடி
என் கை பிடித்து பள்ளிக்குச் சென்று
என் கூட சரிசமமாக அமர்ந்து சண்டையிட்ட
என் பெண் செல்வம்
இன்று என் மடியில் அமர்ந்து
இன்னொருவன் சொத்தாகிவிட்டாள்
அவன் கைபிடித்தே ஏழடி நடந்துவிட்டாள்
என்னை தனியாக்கிவிட்டு சென்றேவிட்டாள்
  
நடப்பேன் நிமிர்ந்து நன்னடையுடன்
நேர்கொண்ட பார்வையுடன்
தெளிந்தசிந்தனையுடன்
திண்ணமான எண்ணத்துடன்
நீ இல்லாவிடினும் என்னுடன்
வாழ்ந்தே காட்டுவேன் துணிவுடன்


பகடை காயயை சகுனி உருட்ட பாஞ்சாலி மானம் அழிந்தது
பகடையாக  இராவணன் கவர்ந்த சீதைமானம் தவித்தது
பகடையாக அக்காலம் தொட்டு இக்காலம் வரை பெண்குலம் தவிக்கிறது
பகடையாக ஆகாமல் காப்பாற்றிக்கொள்ள தினம் பெண்கள் போராட்டம் தொடர்கிறது
  
அன்னையின் ஈடில்லா அன்பு
தந்தையின் கண்டிப்பான  அன்பு
சகோதரனின்  பாசமானஅன்பு
காதலனின் வெறித்தனமான அன்பு
குழந்தையின் வெகுளியானஅன்பு
பெண்ணிற்குதான் எத்தனை அன்பின் பரிமாணங்கள்
அத்தனையும் அவள் பாதுகாக்கும் பொக்கிஷங்கள்


சுகம்

அன்னையின் மடி சுகம்
தந்தையின் தோள் சுகம்
கைபிடித்தவனின் காதல் மொழிசுகம்
கிள்ளை மொழி பேசும்
பிள்ளையின் மழலை சுகம்
மழை நேர ஈரக்காற்றுசுகம்
பாதத்தை தீண்டும் பனிபுல்லும் சுகம்
குயிலின் கீதமும் சுகம்
கன்றினைவருடும் ஆவின் குரலும் சுகம்
மலரின் மணமும் சுகம்


ஒலி எழுப்பி அதிகாலை முழங்கி
என்னை துயில் எழுப்பி விட்டதம்மா
கன்றும்பசுவும் ஒரு முகமாக
கொஞ்சும் நேரமம்மா
பறவைகள் வானில் கீச்சிட
வண்டுகள்பூக்களில் ரீங்காரமிட
வாயிலில் தெளித்த சாண நீரும்
அதன் மீது வளைந்தகோலப்பொடியும்
நடுவே சட்டமாக வந்தமர்ந்த பூசணிபூவும்
பையன் வீச்சில் வந்துவிழுந்த நாளிதழும்
அடுப்பில் மணத்த அம்மா கைபக்குவமும்
மனதை நிறைக்கும் நேரமம்மா

பொல்லாத உலகம்
அவனவன் முதுகில் ஆயிரம் அழுக்கு
பேசுவதென்னவோ மற்றவர்வழக்கு
தோல்விகண்டு அழுதாலும் சிரிக்கும்
வெற்றிகண்டு சிரித்தாலும்ஏசும்
தாம் வாழ சிரமிப்பதில்லை
பிறர் வாழ பொறுப்பதில்லை

கட்டி வைக்கிறாய்
பெண்ணாக பிறந்தாய்
வாயை திறவாதே
என கட்டி வைக்கிறாய்
அங்கிங்கு செல்லாதே
என அடக்கி வைக்கிறாய்
படித்தது போதும்
என என்அறிவு பசியை
கிள்ளி வைக்கிறாய்
பிடித்தம் இல்லையெனினும்
கண்டவனை கட்டிவைக்கிறாய்
எனக்கென ஒரு வாழ்க்கை
எனக்கென ஒரு ஆசை இன்றியே
அடக்கிஆள்கிறாய்
பெற்றோர் என்பதால்
தலை வணங்கியே ஏற்றுக்கொள்கிறேன்
ஆயினும் என்தனித்துவத்தை
விலை குடுக்க மாட்டேன்
கவிதை எண்ணங்களின் பிரவாகம்
ஆழ் மனதின் வெளிப்பாடு
கருத்துகளின் வண்ணத்தொகுப்பு
ஆசைகளின் பிரதிபலிப்பு
கனவுகள் கற்பனைகளின் அணிவகுப்பு
இருக்கும்வரைஒன்றின் அருமை தெரியாது
கையில் இருக்கும் பொக்கிஷத்தின் பெருமை புரியாது
இழந்தபின் அதனை எண்ணி மனம் கலங்குது
இனி வருமா கை சேருமா என நெஞ்சம் துடிக்குது

எதை தேடி ஓடினேன்
எதை கண்டு களித்தேன்
இதைத்தானா நாடினேன்
என என்னை நானேகேட்கிறேன்
கைக்கு கிட்டும்வரை பதட்டம்
கிடைத்தபின் அதன் மீதுநாட்டம்
இவ்வளவுதான இது
என ஒரு நாள் அதுவும் திகட்டும்
வாழ்வின் பொருள் இதல்லாது வேறேது

அம்மா
என்னை பெற்று சீராட்டி பாலூட்டி வளர்த்தாள்
என் விரல் பிடித்து எழுதவைத்தாள்
என் கை பிடித்து பள்ளியில் சேர்த்தாள்
நல்லது பல கூறினாள்

குமரியாக நான் வளர
நற்பண்புகளை என்னுள்வளர்த்தாள்
கைக்கு கையாக காலுக்கு காலாக நின்றாள்
மனதிற்கு உறுதுணையாகவிளங்கினாள்
மனோதிடத்தை வளர்த்தாள்
சுயமாக நிற்க வைத்தாள்
நான் வெல்ல தான்ஜெயித்தாள்

நல்ல பெண்மணியாக உருவாக்கினாள்
அவளைப் போன்ற பிரதிரூபமாகஎன்னை மாற்றினாள்
இனி நான் வெல்வேன் சாதிப்பேன் என திண்ணமானாள்
என்னைபிரிந்து சென்றாள்- உடலளவில்
இதோ என் கண் முன்னே
இதோ என்மனதினுள்ளே
இன்றும் வாழ்கிறாள்


மகளே... மருமகளே...
நான் பெண்ணாகப் பிறந்தேன்
மகளாக வளர்ந்தேன்
சகோதரியாக உருபெற்றேன்
என்னுள்ளும் தாய்மையை வளர்த்தேன்
அதை பறிமாற யாருமில்லையே என வருந்தினேன்

என்னை தாயாக்க வந்தாய்
என் ஜீவனாகப் பிறந்தாய்
என் கருவில் ஜனிக்கவில்லை
என் மனதில் பிள்ளைக் கனியாக ஜனித்தாய்
என் மார்பிலும் தோளிலும் வளர்ந்தாய்

வறண்ட பாலைவனமாக இருந்தேன்
என்னில் சோலைவனத்தை உருவாக்கினாய்
காய்ந்த பயிராக என் உணர்வுகள் வாடி இருந்தேன்
உன் அன்பெனும் நீர் ஊற்றி என்னை துளிர்விடச் செய்தாய்

உன் ஸ்பரிசத்தில் நான் என்னை மறந்தேன்
உன் மழலையில் என்னை தொலைத்தேன்
உன் தளிர் நடையில் உயிர்த்தேன்
உனக்கு அமுதூட்டி பசியாறினேன்
உன்னை உறங்க வைத்து தாலாட்டினேன்
உன் பொக்கை வாய் சிரிப்பில் இறைவனை கண்டேன்
உன் அணைப்பில் என் அன்னையை உணர்ந்தேன்

அத்தைமடி மெத்தையாக
உனக்கு மற்றுமொருதாயாக
காத்து நிற்பேன்
என் மகளே மருமகளே
என்னை ஆளப்பிறந்தவளே
என் உயிரில் கலந்த கருவே
என் வாழ்வின் உயிர்த்தீ நீயடி. 

மீண்டு வா மகனே
மீண்டும் வா
மரணத்தின் வாசலில்
நாட்டின் துயர் போக்க
மக்களின் உயிர் காக்க 
என்னை துறந்து காவல் நிற்க 
சென்றவனே என் மகனே

என்று வருவாயோ
வரவேதான் மாட்டாயோ
என கலங்கி அழுத விழிகளுடன் 
ஆயிரம் கண்ணுடன் 
வாயிலை பார்த்து நிற்கிறேன் 
தாய்நாட்டின் கடமை முடிந்தபின்
இந்த தாயின் கடமை காக்க சீக்கிரம் வா... 


காதல் - சில கிறுக்கல்கள்

கனவிருக்கு நெஞ்சுக்குள்ள
கண்ணீர் இருக்கு கண்ணுக்குள்ள
உன் நினைவிருக்கு மனசுக்குள்ள
நான் இருக்கேனா உனக்குள்ள

தாவரமாய் நான் படர்ந்திருக்க
மழைநீராய் அன்பை நீ பொழிந்திருக்க
கொடியாய் நான் மேலே உயர்ந்திட
என்கொழுகொம்பாய் நீ தாங்கிட மாட்டாயோ

பொழுதெல்லாம் உன் நினவு
இரவெல்லாம் உன் கனவு
வாழ்வெல்லாம் உன் உறவு - இனி
நமக்குள் ஏது பிரிவு

வெளியே வெண்பனி உறைந்திருக்க...
உள்ளே உன் அன்பு நிறைந்திருக்க...
கையோடு கைகோர்த்து நாம் நடந்திருக்க...
காலம் இப்படியே இருந்தால் மகிழ்வேனே என நான் களித்திருக்க...
அதே கணம் நீ என்னை கண்டு அதை ஆமோதிக்க
வெண்பனிதான் இனிதே சிரித்திடுதே.

பார்தேனா உன்னை... காதல்
சொன்னேனா உன்னிடம்... கண்ணால்
கலகம் செய்தவளே...மோதல்
கொண்டேனா உன்னிடம்... ஆயினும்
என்னவளாக ஆனவளே...காதலிக்கிறேனடீ
என்னை பித்தனாக்கினாயடீ சகியே

இதழ்தொட்ட கள்வனே
நீ மலரிடம் தேனுண்ணும் வண்டா... அல்லாது
இதழில் கவி எழுதும் கவிஞனா
காற்றும்கூட புகக் கூடாது நமக்குள் என்றேன்
நீயே என் சுவாசமுமாவாய் என நான் நினைக்கவில்லை

வருவேனோ நான் என பார்திருந்தாயோ
வந்த பின்னும் என்னை காண மாட்டாயோ
விழியோடு விழி கலக்க மாட்டாயோ
சிப்பி இதழ் வாய் திறந்துதான் ஒரு சொல் பேசமாட்டாயோ
வண்ண மலரே தேன் முத்தம் ஒன்றை தாராயோ
கோபம் என்னவோ அதையும்தான் சொல்லிடாயோ

உன் மகிழ்வுக்காக உன்னுடன் ஓடி வந்தேன்
தாய் தந்தையின் இகழ்வுக்கு ஆளாக்கினாய்
காலமெல்லாம் துணை இருப்பாய் என நம்பி வந்தேன்
நீயோ பசி தீர்ந்ததும் பறந்திட்ட கிளியானாய்
கதறிட நாதியில்லை
சென்றிட திக்கில்லை
பறந்திட சிறகில்லை
இறந்திட துணிவில்லை
வாழ்ந்திட வழியில்லை

காதலிக்கிறேன் என்றேன்...
தலை கவிழ்ந்தாய்
நீயும் என்னை காதலிக்கிறாயா என்றேன்...
கண்களை மூடினாய்
என் காதலை கேட்டு துவண்டாயா...
கோபம் கொண்டாயா...
அழுகிறாயா ...சிரிக்கிறாயா...
என் கேள்விக்கென்ன பதில் என்றேன்
மௌனமே என்றாய்

காதல் இதுதானோ என்று வியக்கிறேன்
உன்னை நினைத்தால் உள்ளம் சிலிர்கிறது
உன்னை எண்ணி உண்டால் கடுக்காயும் இனிக்கிறது
உன்னை நீங்கினால் நெஞ்சம் தவிக்கிறது
உன்னை கண்டால் உள்ளம் பூரிக்கிறது
உன்னை தீண்டினால் மனசு நிறைகிறது
நீ அழுதால் நான் துவள்கிறேன்
நீ சிரித்தால் நான் சிரிக்கிறேன்
இது காதலா வியக்கிறேன்...

என் காதலை சொன்னேன்
வெட்கி நின்றாய்
உன் காதலை கேட்டேன்
சிவந்து போனாய்
உன் கன்னச் சிவப்பில் என் மதி மயங்குதடி.
உன் கள்ளச் சிரிப்பில் என் சிந்தை சிதருதடி

வாழ்வினை வெறுத்திருந்தேன்
உன்னை காணும் வரை...
காதலை கசந்திருந்தேன்
உன் அன்பினை உணரும் வரை...
தமிழும் ருசிக்கவில்லை
உன் பேச்சை கேட்கும் வரை...
தேனும் இனிக்கவில்லை
உன் இதழ் சுவைக்கும் வரை ...

விழிகளே வாசலாக உன் இதயத்துள் நுழைந்தேன்
மௌனமே மொழியாக என் காதலை சொன்னேன்
இந்தப்பயணம் முடிவதெப்போது
நீ என்னை வந்து அடைவதெப்போது
பதில் ஒன்று சொல் கண்ணே காத்திருக்கிறேன்...

காதலை சொல்ல துணிவிருந்த உனக்கு
தாலிகட்ட ஏன் துணிவில்லாமல் போனது?
காதலுக்கு பச்சைகொடி காட்ட வேண்டினாயே
கழுத்துக்கு மஞ்சள் கொடி கட்ட தயங்கியது ஏன்
வாழ்நாள் முழுவதும் கூட வருவேன் என்றாயே
இரு நேர் கோடுகள் ஒன்றாக சேர்வதெப்போது
பாதை ஒன்றாகி பயணம் செய்வதெப்போது

விரும்புவதால் விலகுகிறேன்
உன்னை விலகிச் செல்கிறேன்
நீ நன்றாக வாழ நீங்கிச்செல்கிறேன்
என்னை விரும்பும் நீ என்றென்றும்
நலம் வாழ வாழ்த்துகிறேன்...

வைரத்தூவல்களாக விழும் பனித்துளியை நீ ரசிக்க,
உன் கண்ணில் தெரியும் வைர மின்னலை நான் ரசிக்கிறேன்
நீ காணும் காட்சிகள் யாவும் நானாக இருக்க ஆசை
நீ பேசும் மொழிகள் யாவும் எனக்காக இருக்க ஆசை

உன்னை நான் காணும்போது
என்னை நீ காணாது
விண்ணை நீ பார்கின்றாயே
கண்கள் கலப்பது எப்போது
காதல் பரிமாறுவது எவ்வாறு...

விழியால் மொழி பேசி என்னை கொள்ளை கொண்டாய்
என் மனதினில் வந்தமர்ந்து என்னை ஆட்கொண்டாய்
எனக்கு எல்லாமுமாக நீயே இருந்தாய்... ஆனால்
இப்போதோ என்னை கண்கொண்டும் காண சகிப்பதில்லை,
என் வாய் மொழி கேட்கவும் ஆசை இல்லை
ஒரு அன்பு வார்த்தையுமில்லை
ஆசை அணைப்புமில்லை
உன் ஒதுக்கத்தினால்
என்னை கொல்லாமல் கொல்கின்றாய்...

போதுமடா...இப்பிறப்பில்
உன் அன்பு ஒன்று போதுமடா
உன் ஆசை மொழி கேட்டால் இனிக்குதடா
உன் அணைப்பில் உடல் குறுகுதடா
உன் அரவணைப்பில் நெஞ்சம் உருகுதடா
என்றும் உன்னவளாகவே இருக்க ஆசையடா

ஆருயிரே...
நீயும் ஒரு மலரே
என் கைகளில் மாலையாக சாய்ந்தவளே
மலரை போல மென்மையானவளே
கலங்காதே நீக்குவேன் உன் துன்பம் எல்லாம்
தாங்கி நிற்பேன் துணையாக காலமெல்லாம்

ஓரக்கண்ணால் நீ பார்க்கையிலே மச்சான்
நான் சிவந்து போகிறேனே...
ஓரடி நீ முன்ன வெச்சா மச்சான்
பத்தடி நான் பின்ன வெக்கிறேனே...
பரிசம்தான் நீ போடும் முன்னே மச்சான்
முந்தானைய ஏன் பிடிக்கிறே
கிணத்து தண்ணிய தான் மச்சான்
ஆத்துவெள்ளம் கொண்டு போகுமோ

செல்வான் என்னைவிட்டு... சென்றுவிடுவான்
என ஒரு நாளும் நான் நினைக்கவில்லையடி சகியே
கண்ணாலும் காணவில்லையே
வாய் பேச்சும் கேட்கவில்லையடி சகியே
எங்குகாணினும் அவன் முகமே
என் உள்ளும் அவன் குரலே ஒலிக்குதடி சகியே
காணாமல் தவிக்கிறேன்... இனி
ஒரு நொடியும் உயிர் வாழ்கிலேன் என
ஒரு வார்த்தைதான் கூறி வருவாயோடி சகியே

செய்வாயா எனக்காக ஒன்றே ஒன்று
வருவாயா என் மனம் மலர்ந்து மகிழ
சென்றாயாம் என்னைவிட்டு... சொல்கிறார்கள்
நீயே நானாக நானே நீயாக இருக்கையில்
நீ எப்படி செல்வாய்
என்னைவிட்டு எப்படி பிரிவாய்... பிதற்றுகிறார்கள்
உன் உயிரே நானல்லவா
என் சுவாசமே நீயல்லவா
இதில் பிரிவேது ஊடல் ஏது...பேசுகிறார்கள்
அறியாமையில் பேசுகிறார்கள்...

படைத்தவன் குறும்புக்காரன்....
என்னையும் படைத்து
என்னுள் உன்னை வைத்து....
எனக்காக உன்னையும் படைத்து
உன்னுள் என்னையும் வைத்து...
கண்ணில் இருந்து உன்னை மறைத்து
உன்னைத் தேடி என்னை அழ வைத்து
கண்ணாமூச்சி ஆடுகிறான்
அந்த குறும்புக்காரன்...

விழியோடுவிழி சேர
முகத்தோடு முகம் உரச
இதழோடு இதழ் இணைய
உடலோடு உடல் இழைய
மனதோடு மனம் கலக்க
பிரிய மனமின்றி
நான் பிரியா விடை தர
என்மனமும் தான் கலங்குகிறதே
என்னை விட்டுப் பிரியாதே என்னுயிரே...

உன்பிரிவால் வாடுகிறேன்
உன் நினைவால் வாழுகிறேன்
உன்னை அன்றி வேறு உறவில்லை
உன்னை பிரிந்தொரு வாழ்வில்லை

உன் ஒற்றை பார்வையில் என்னை தொலைத்தேனடா
உன் ஒரு வார்த்தையில் சொக்கி போனேனடா
உன் அணைப்பில் கரைந்தேனடா
உன் ஒரு வார்த்தை என்னை கொன்றே விட்டதேடா...
மறந்துவிடு என்றாயேடா...
மறக்குமா நெஞ்சம்...
கலங்குதேஇதயம்
தவிக்குதேமனம்
ஏனடா...

கண்ணாளனே உன்னை கரம் பிடித்தே
ஏழு அடிகள் நடந்தேன்
ஏழு ஜென்மங்கள் வாழ துடித்தேன்
இன்பத்திலும் துன்பத்திலும்
பிடித்த கரம் விடாதே
உன்னில் பாதி நான் என்பதை மறவாதே
உன் நிழலாக நான் துணையிருப்பேன்
உன் மனதினில் என்றும் குடியிருப்பேன்

மாறிவிட்டாய்...என் சகலமுமாக
என் மனதிற்கு இனியவனாக
எனக்காக எதையும் செய்யக்கூடியவனாக
என் எதிர்பார்ப்புகள் அனைத்தையும்
பூர்த்தி செய்பவனாக
மொத்தத்தில் எனக்காக அளவெடுத்து
தைத்த சட்டையைப்போல ஒன்றி போனாய்

மழைமேகம் கருக்க
வான் தூறல் சிலிர்க்க
ஊத காற்று விறைக்க
இள மாலைநேரத்தில்
உன் கையோடு கை கோர்த்து
உன் அணைப்பின் கதகதப்பில்
மழை நனைத்த வீதியிலே
உலா போகவே
உள்ளம் நாடுதே

கற்பனையே தூரிகையாய்
கனவுகளே வண்ணங்களாய்
எண்ணங்களை குழைத்து
என் மன வானில்
நான் வரைந்திட்ட அழகிய ஓவியம் நீ

இதென்ன கோபமோ
ஏனிந்த மௌனமோ
நான் செய்த பிழைதான் என்னமோ
சோலை பசுங்கிளியே
வண்ணமலர் வண்டிசையே
தேன் சிந்தும் மலர் கொடியே
உன் கோபத்தை தாங்குவேன்
உன் மௌனத்தை தாங்கும் சக்தி இல்லையே

நெருப்பாக நீ கொதித்தால்
நீராக நான் அணைக்கவா
தள்ளி நீ இருந்தால்
நான் உள்ளே வருந்தவா
நம்மிடையே இந்ததூரம்
உன் விலகல் தந்த பாரம்
என் உள்ளக் கலக்கம்
இன்னும் எத்தனை நேரம்

வார்த்தைகளின்றி கண்ணால் பேசினாய்
சொல்லாத வார்த்தையிலே காதல் சொன்னாய்
என் நெஞ்சோடு நெஞ்சாக கலந்து போனாய்
செம்புலபெயல் நீர் போல
அன்புடைய நெஞ்சம் தான் கலந்தாய்
இன்று ஏனடி என்னை விட்டுச் சென்றாய்
என்னையே மறந்தாயோ
என்காதலையே துறந்தாயோ
வேறொருவனை மணந்தாயோ
காற்றோடு கலந்தாயோ
பதில் ஒன்று சொல்லாயோ

யுகங்கள் ஆகின்றன உன்னை காணாமல்....
என்ன நேற்று மாலை தான் பார்த்தோமா... என்ன  இப்படி 
ஓர் இரவே யுகமானால்...
என்ன என் நிலை நீ என்னைவிட்டு பிரிந்தால்

காதல்கொண்டேன்
என் வாழ்விலும் நீ
என் சாவிலும் நீ
உடன் இருக்க ஆசைகொண்டேன்
வாழ்க்கை எனும் பாதையில்
என்னோடு கை கோர்த்து
நீ நடக்ககேட்டேன்
உன் முன் மண்டியிட்டேன்
நீ சம்மதித்தால் மாலையிடுவேன்

நீ என் எஜமானி தான்
உன் கண் பார்வை இடும் ஆணையை
நிறைவேற்ற காத்திருக்கும் சேவகன் நான்
நீ அன்னையாக என்னை தாலாட்ட
உன்னிடம் சேயாக மாறி போனேன் நான்
நீ கண் மலரும் நேரமட்டும் அல்லாமல்
கண் அமரும் நேரமும் கூட இமையாக காப்பேன் நான்
என்னை பிணைத்து வைத்திருக்கிறாய்
உன் அன்பெனும் பிடியில்

என் கரம் பிடிப்பாய் என நான் காத்திருந்தேன்
உன் காதல் சொல்வாய் என பார்த்திருந்தேன்
காலம்தான் கனிய காத்திருந்தாயோ
என் பதிலை நினைத்து பயந்திருந்தாயோ
காலமும் நேரமும் காத்திருக்காது அன்பே
இதோ நானே சொல்லிவிட்டேன் என் மனதை
பிடித்துவிட்டேன் உன் கையை
இனியானும் சொல்லிவிடு ஒருவார்த்தை
காலமெல்லாம் துணையிருப்பேன் என்று

உன் கைகுட்டையாக இருக்க ஆசை
எந்நேரமும் உன் கைகளுக்குள் அடங்கி இருக்க ஆசை
அவ்வப்போது உன் முகம் வருட ஆசை
பாதுகாப்பாக உன் சட்டை பையில் ஒளிந்திருக்க ஆசை
அதன் ஓரம் தைத்த ரோஜாவாக என் இதயம் இருக்க ஆசை
நீ இதழ் ஒற்றிட உன் மீசை குத்திட சிலிர்த்திடத்தான் ஆசை
உன் கைக்குட்டையாக இருக்க ஆசை

காதல்கொண்டேன்
என்னை இழந்தேன்
உன்னில் கலந்தேன்
தன்னை மறந்தேன்
கருவில் சுமந்தேன்
பேரின்பம் பெற்றேன்
நான் அந்த சகுந்தலையா அறியேன்
நீயோ என்னையே மறந்தாய்
என் உறவை துறந்தாய்
பிள்ளையை மறுத்தாய்
நீ துஷ்யந்தன்தானோ

எனக்கு மகிழ்ச்சியே
நீ துஷ்யந்தனாக இருக்கும் வரை
நீ துச்சாதனன் ஆகாத வரை
நீ ராமனாய் இருக்கும் வரை
நீ கிருஷ்ணனாக ஆகாத வரை

நான் கண்ட காட்சியை நீயும் காண
நான் ரசித்ததை நீயும் ரசிக்க
இந்த நிலமும் அந்த வானும்
நம் காதலுக்கு சாட்சியாக
இளம் காற்றும் சுடும் வெய்யிலும்
நமக்கு வாழ்த்துகளாக
அன்பே பிரதானமாக கொண்டு
நீ என்னை மாலையிடுவதாக
கனா கண்டேன் தோழனே...

அந்த வானத்தை போல உயர்ந்ததா உன் காதல்
அந்த ஆகாயம் போல விரிந்ததா உன் அன்பு
சிரிக்கும் சூரியனை போல வீரியமானதா உன் நட்பு
சிலிர்க்கும் காற்றினை போன்றதா உன் அரவணைப்பு

வித்தியாசமாய் இருக்கிறாய்...
யாருமே சீண்டாத என்னை
உனக்கு ஏன் பிடித்துப்போனது...
யாருமே சகிக்காத என் முகம்
உனக்கு ஏன் அழகாகத் தோன்றியது...
யாருக்குமே கண் தெரியாத என் அக அழகு
உன் கண்ணில் எப்படி பட்டது...
எவருமே பாராட்டாத என் குரலினை
குயிலாக நீ கருதியது எப்படி...
ஒரு வேளை பிரம்மன் எனக்காக படைத்திட்ட
என்னவனோ நீ... உன்னவளோ நான்...

உன் காதலில் குளிர்ந்தேன்
உன் அன்பினில் களித்தேன்
உன் மார்பினில் துவண்டேன்
உன் இதழ் சுவைக்க கிளர்ந்தேன்
மன்னவனே எங்கிருந்தாய்
இவ்வளவு நாட்களும் நானறியேன்

மறந்துதான் போனேன்
நான் இன்னொரு வீட்டில் பிறந்தவள் என்று
அன்னை தந்தையிடம் வளர்ந்தவள் அன்று
சுற்றமும் நட்பும் பல உண்டு என்று
நீ செய்த மாயையால்
உன் அன்பின் பரிமாணத்தால்
நான் என்னையும் கூட மறந்துதான் போனேன்
எல்லாமே நீயாகி போனேன்

நான் கொண்ட காதல்
கண்ணில் துவங்கவில்லை
மனதில் துவங்கியது
பேசி அறியவில்லை
உள்ளத்த்தில் அறிந்தது
தவித்து பிறந்ததில்லை
சிந்தித்து பிறந்தது

பச்சை கதிரு சமஞ்சு நிக்குதடி கண்ணம்மா,
வெக்கப்பட்டு வளைஞ்சு நிக்குதடி பொன்னம்மா
கதிரறுக்க விளைஞ்சு நிக்கும் செல்லம்மா
உன்னை பரிசம் போட அன்று வருவேன் என் கண்ணம்மா
பச்சை வயல் வரப்பிலதான்
நீ அசைஞ்சு நடந்துவருகிறடி
என் நெஞ்சம் தான் குலுங்குதடி
உள்ளம் கள்வெறி கொள்ளுதடி
ஆசைவெறி ஏறுதடி
கொண்ட மரியாதைதான் தடுக்குதடி
உன்னை என் கை அணைப்பில் வைப்பேனடி
கட்டி முத்தம் தருவேனடி
பரிசம் போட்டுதான் விரைவில் கட்டுவேனடி
அதன் பின் நம்மை தடுப்பார் யாரடி

உன்னில் பாதியாய் மாறியிருப்பேன்
நெஞ்சில் உன்னை தாயாய் தாங்கி நிற்பேன்
அன்புத் தோழியாய் தோள் கொடுப்பேன்
குறும்பு சகோதரியாய் துள்ளித் திரிவேன்
கைகொடுக்கும் மந்திரியாய் சொல்லி வைப்பேன்
உன் கை பிள்ளையாய் தவழ்ந்திருப்பேன்
தாசியாய் உன்னை காதலிப்பேன்
அனைத்துமாகி எனக்கு நீ இருந்தால்
காலமெல்லாம் நான் உன்னில் இருப்பேன்

வந்துவிடு உயிரே
உன்னை நினைத்து நினைத்து
நான் மாய்ந்து போகும் முன் வந்துவிடு உயிரே
பாலும் கசந்தது படுக்கையும் நொந்தது
வளையலும் கழண்டது இடையும் நெகிழ்ந்தது
அலங்கரிக்க ஆசையில்லை
அழுது துடிக்க நேரம் போதவில்லை
பொட்டிட்டால் உன் நினைவு
பூச் சூடினால் உன் வாசம்
தென்றல் தீண்டினால் உன் சுவாசம்
அனல் மேல் புழுவாய துடிக்கிறேன் நெஞ்சே
மேலும் தவிக்க விடாமல் வந்துவிடு

நீயின்றி நானென்றும் இல்லையடி என்றாயே
இந்த ஒரு சொல் போதுமடா
உனக்காக காத்திருப்பேன் காலமெல்லாம்
வாழ்ந்திருப்பேன் உன் நினைவுகளோடு நாளெல்லாம்
பொறுத்திருப்பேன் மனதின் வலியை பொழுதெல்லாம்
நீ கடமை முடித்து வரும் நாளை
ஆவலுடன் எதிர்பார்ப்பேன்
கலக்கம் வேண்டாம் என் தலைவா
பார்வை கொண்டு என்னை வென்றவனே
பேசாமலேயே என்னை கொண்டவனே
என் மனதை ஆண்டவனே
என் கணவனே கண்ணாளா

மடி மீது உறங்கினாயோ கண்ணா
உன்னை அன்னையாய் தாங்குவேன் நானே
உன் முகம் கண்டு நான் மயங்க
என் மடி மீது நீ கண்ணுறங்க
காதலாகி கசிந்துருகினேன்

காதல்கதை எழுதுவோரும் வியக்கும் வண்ணம்
ஒருவனுக்கு ஒருத்தியாய் மனமொத்து
வாழ்ந்திட எண்ணம்
நீ அருகில் இருக்கையில்
என்னை எந்த நஞ்சு அண்டும்
நீயே தருவாயோ நானே தருவேனோ
தரவும் பெறவும் செழித்து வாழ்ந்து
நல்லதொரு இல்லறம் செய்வோம்
பார்த்திருப்பேன் நீ வரும் வழி மேல்
விழி வைத்து காத்திருப்பேன்
சமைத்திருப்பேன் உன் ருசி அறிந்து
உனக்காக பரிமாற தவித்திருப்பேன்
சகித்திருப்பேன் பொறுமையாக நீவர
நேரமாகினும் பொறுத்திருப்பேன்
வந்த நொடி என்னை அள்ளி கையில் எடுத்து
நீ கொஞ்ச திளைத்திருப்பேன்
உன் ஆசை பேச்சுகளை எண்ணி களித்திருப்பேன்

குடியிருப்பேன் நான் குடிசையிலும்
மாட மாளிகை கூட கோபுரங்கள் வேண்டாம்
உன்மனதில் ஒரு சிறு இடம் கொடு போதும்
மகிழ்ச்சியாய் வாசம் செய்வேன் காலமெல்லாம்

வெட்கம் வந்ததே உன்னை காண்கையில்
கன்னம் சிவந்ததே உன்னை நினைக்கையில்
உடல் சிலிர்த்ததே உன் தொடுகையில்
உள்ளம் சிலிர்த்ததே உன் வாய் மொழியில்

வித விதமாக எழுதி பார்த்துக்கொண்டேன்
என் பெயரை உன் பெயருடன் இணைத்து
சிலபலவாக சொல்லி பார்த்துக்கொண்டேன்
உன் பெயரை இனிக்கிறதே என் நினைத்து

மயக்குவது ஏனடி
ஓரவிழி பார்வையால் என்னை
வீழ்த்துவது ஏனடி
வாய் பேசாமலே கண்ணால்
கொல்வதும் ஏனடி
எட்ட இருந்தே இம்சிப்பதும் ஏனடி
கிட்டே வந்து ஒரு 
ஆசைமொழி சொல்லடி

சகி ஈரெழுத்து சொல் தான்...
ஆனால் ஈரேழுலக சுகமும் தருகிறது
அதை நீ உச்சரிக்கும்போது

அந்தநிலவு சாட்சி
இந்த மலரும் சாட்சி
வீசும் தென்றலும் சாட்சி
பேசும் நம் மனம்சாட்சி
பெற்றோரை துறந்து
வீட்டை மறந்து
ஓடி வந்து
இங்கே கிடந்து
கைபிடித்த உன்னை
கைவிடேன் என்றும்
உன் கையணைப்பில் நான்
என் சகலமும் நீ
காற்றும் நிலவும்
வானமும் பூமியும்
நம் காதலுக்குசாட்சி

காதலில் திளைத்து பாசுரம் பாடினாள் கோதை
காதலில் பக்தி பரவசமாகி  பாடல்கள் பாடினாள் மீரா
காதலில் கசிந்துருகி அவனே சர்வமுமானாள் ராதா
காதலில் வென்றுஅவனை அடைந்தாள் ருக்மிணி
அவனோ அனைவருக்கும் மனம் மயக்கும் கண்ணனே

கண்களில் கனவு...
கன்னத்தில் சிவப்பு...
முகத்தில் நாணம்...
உதட்டில் மடிப்பு...
அழகுக்கு அழகு...
கன்னியவள்
குலமகள் ஆனாள்!

கண்ணாடியில் நான் என்னைக் காண...
நீ கண் முன்னே தெரியும் மாயம் என்னவோ!
என் நிழலும் நினைவும் நீயே தானோ!!

இயங்குகிறது என் இதயம்
உன்னை நினைத்து
கடக்குது காலம்
நீ வரும் வேளையை எதிர்பார்த்து
கலங்குது நெஞ்சம்
அந்நாள் வருமா கை கூடுமா என மலைத்து
தெளியுது கொஞ்சம்
உன் உறுதியான ஒரு சொல் கேட்டு  

மன்னவன் வருவானோடி
மலர்சூட தருவானோடி
அவனுடன் ஏழடி நடப்பெனோடி
அவன் நெஞ்சணையில் பள்ளி கொள்வேனோடி
காத்திருப்பேன் காலமெல்லாம்

வேண்டாத மனைவி வேண்டியவள் ஆக
குடி மறந்து அவன் குடிமகனாக ஆக
சொரணை கேட்ட அவன் கருணை நிறைந்தவன் ஆக
கட்டிய பெற்ற பொறுப்புகளைஅவன் உணர்ந்தவன் ஆக
பொறுமையென்னும் நகை அணிந்து பொறுத்திருப்பேன்

என் சிசுவின் தாயாகும் முன்
என் மடி மீது சேயானாயோ...
என் கழுத்தில் விழுந்த
பொன்வண்ண மாலையோ...
சிற்பி செதுக்கிய
சந்தன சிலையோ...
நீயாகி போனாய்
நான் பேசும் மொழியும்
நான் கேட்கும் சொல்லும்
நான் காணும் காட்சிகளும்
நான் நினைக்கும் சிந்தனைகளும்
நீயே என
எனக்குள் யாதுமாகி நின்றாய்
ஆனால் உனக்குள் நான்... ?

என்பதனால்
நீ என ஒன்று உண்டு என்பதனால்
நான் என்பது ஒன்று இங்கு உண்டு
அதனால் நான் என்பதா
நீ என்பதா
நீ வேறு நான் வேறு என உள்ளதா
நீ இல்லாமல் இனி நான் என்பது ஏதடா

காண நேர்ந்தால்... உன் பெயரை
எங்கேனும் காண நேர்ந்தால்
உள்ளம் துள்ளுது
உச்சரிக்கும்போது உதடு இனிக்குது
காணாதபோது... உன்முகத்தை
காணாதபோது உள்ளம் பரபரக்குது
நெஞ்சம் துடிக்குது
நினைவலைகளில் நெஞ்சம் கனக்குது

சொர்கமாக இருந்தாலும்
எனக்கு அது நரகம்தான்
அங்கு நீ என்னுடன் இல்லாவிடில்

நீ என்னவன் என நினைத்தேன்
நீ தன்னலம் கருதினாய்
நீ என் கைத்தலம் பற்றுவாய் என எண்ணினேன்
நீ கைவிடலில் தேர்ந்தாய்
நீ என் எதிர்காலம் என மகிழ்ந்திருந்தேன்
நீ என்னை உன் கடந்த காலமாக்கினாய்

உன் நினைவே என் உயிருக்கு உணவு
உன் சொல்லே என் காதுக்கு கானம்
உன் பார்வையே என் மனதுக்கு வரம்
என் வாழ்ந்திருந்தேன்
உன் பிரிவே எனக்கு யமன்
என உணர்த்திவிட்டாய்
என் வாழ்க்கையல்லவோ இது
நீ விளையாடும் பொம்மை அல்லவே இது
என் மனதை பந்தாட இது உன் கால்பந்தல்ல
நீ விட்டெறிந்து விளையாட நான் உன் கைபந்துமல்ல
பாஞ்சாலியை பகடை காயாக உருட்டியது அந்தக் காலம்
பாய்ந்து வந்து உன் வஞ்சகத்தை அழித்திடுவது இந்தக் காலம்